கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தின் லிங்கசுகுரு பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் சித்தராமையாவின் ஹெலிகாப்டர், விமானியின் தவறால் மாற்று இடத்தில் தரையிறங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரன் திருமணத்திற்காக, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ராய்ச்சூர் சாலையில் தனித்தனியே ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆனால், முதலமைச்சரின் ஹெலிகாப்டர் விமானி திசைமாறி, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கலபுரகி சாலையில் பாஜக எம்.எல்.ஏ. மணப்பா வஜ்ஜலுக்குச் சொந்தமான தனியார் ஹெலிபேடில் தரையிறக்கினார். இதனால் அங்கு முதலமைச்சரை வரவேற்க அதிகாரிகள் எவருமின்றி ஒரு காவல்துறை வாகனம் மட்டுமே இருந்ததைக் கண்டு சித்தராமையா கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்தத் தவறினை உணர்ந்த விமானி உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் அவசர அவசரமாக அந்த இடத்திற்கு விரைந்த போதும், அதற்குள் முதலமைச்சர் சித்தராமையா மற்றொரு வாகனத்தில் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார்.
இதற்கிடையில், முதலமைச்சருக்காக ஒதுக்கப்பட்ட ஹெலிபேடில் அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இந்தத் தவறு விமானியின் கவனக்குறைவால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டாலும், முதலமைச்சரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடியாகக் கருதி இது குறித்து விரிவான விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் திருமணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய முதலமைச்சருக்கு அதிகாரிகள் முறையான பாதுகாப்பு மரியாதை அளித்து வழி அனுப்பி வைத்தனர்.
