கேரளாவில் மசாஜ் சென்டரில் மாமுல் கேட்டு ரவுடித்தனம் செய்ததோடு, அங்கிருந்த பெண் ஊழியரை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசாஜ் சென்டர் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ஒரு கும்பல், அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

அந்த நிறுவனத்தை அடித்து நொறுக்கியதோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த பெண் பணியாளரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் கேரள மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்த அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த வக்கிரமான தாக்குதல் குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சமீபகாலமாக மசாஜ் சென்டர்களை குறிவைத்து அரங்கேறும் இத்தகைய ரவுடித்தனங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.