திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் ஏன் ‘இந்தியா’ கூட்டணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிறார் எனக் கேள்வி எழுப்பினார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்று கூறிய அவர், ஸ்டாலின் தன்னை ‘என்.டி.ஏ. பழனிசாமி’ என்று விமர்சிப்பதற்கும் பதிலடி கொடுத்தார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய அவர், வருமான வரி ஏய்ப்புக்காக அபராதம் விதிக்கப்பட்டதே விஜய் ஊழல்வாதி என்பதற்குச் சாட்சி என்றும், அவர் மக்கள் மத்தியில் நேரில் வருவதில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் அவர்கள் அதிமுக கூட்டணிக்கு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பாசனத்திற்குத் தண்ணீர் இல்லாததால் காய்ந்து வரும் விளைநிலங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் பதராகிவிடும் நிலையில் உள்ளதாகக் கவலை தெரிவித்தார்.
பயிர்களைக் கையில் ஏந்தி விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்த அவர், விவசாயிகளுக்குச் சரியான வருமானம் கிடைத்தால்தான் நாட்டின் உற்பத்தி பெருகும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தவெக நிர்வாகி செங்கோட்டையனின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர், செங்கோட்டையன் ஒரு ‘செல்லாத நோட்டு’ என்று காட்டமாகத் தெரிவித்தார்.
