சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், வரும் 2026 சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணிக்கே தங்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கடந்த மூன்று தேர்தல்களாகத் திமுகவை ஆதரித்து வருவதாகவும், இந்த முறையும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், அதிமுக ஆட்சியில் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும், தற்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும் அவர் பாராட்டினார்.
தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசிய அவர், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது தங்களையும் திமுக தலைமை அழைத்துப் பேசும் என்று கூறினார்.
“நாங்கள் தொகுதிகளைக் கேட்பதற்கும் தயாராக இருக்கிறோம், திமுக தலைவர் கொடுப்பதற்கும் தயாராக உள்ளார்” என்று குறிப்பிட்ட அவர், குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதியைத் தனது கட்சி எதிர்பார்ப்பதாகச் சூசகமாகத் தெரிவித்தார்.
கடந்த தேர்தலில் சீட் ஒதுக்கப்படாத நிலையில், இந்த முறை நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி சென்னையில் மாநில அளவிலான கூட்டத்தைக் கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.
அரசியல் களத்தில் நடிகர் விஜய் அல்லது அதிமுக என யார் எதிர்த்து வந்தாலும், திமுகவின் பலமான கட்டமைப்பை யாராலும் அசைக்க முடியாது என்றும், 2026-ல் மீண்டும் திமுக ஆட்சியே அமையும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர், தற்போது தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரிய தலைவராகவும் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
