உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில், முதியவர் ஒருவரின் மூக்கு துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்கு இத்தகைய ஐந்தாவது விபத்து இதுவாகும்.

இது தொடர்பான வீடியோவில், காயமடைந்த முதியவர் காரின் பின் இருக்கையில் முகத்தில் பலத்த காயங்களுடன் ரத்தம் வழிய அமர்ந்திருப்பதும், அவருக்கு அருகில் ஒரு சிறுவன் அச்சத்துடன் இருப்பதும் பதிவாகியுள்ளது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் மக்கள் அந்த முதியவரை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களைக் கலங்க வைக்கின்றன.

உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே கடும் தடை விதித்துள்ளார். மாஞ்சா நூலால் உயிரிழப்பு ஏற்பட்டால் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வளவு கடுமையான சட்டங்களும், சோதனைகளும் நடத்தப்பட்டு வரும் நிலையிலும், இன்னும் இது போன்ற கோர விபத்துகள் தொடர்வது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தோலை எளிதில் கிழிக்கும் தன்மை கொண்ட இந்த தடை செய்யப்பட்ட நூலால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.