கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது.

இந்தத் தாக்குதல் நடந்த சரியாக ஒரு வாரத்தில், அதாவது ஜூன் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், சீனா தனது வடமேற்கு பகுதியில் உள்ள லோப் நூர் சோதனைத் தளத்தில் ரகசியமாக அணு ஆயுதச் சோதனையை நடத்தியதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தற்போது அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அணுசக்தி சோதனைத் தடை ஒப்பந்தத்தின் விதிகளை மீறி, நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளால் கண்டறிய முடியாத வகையில் மிகவும் ரகசியமாக இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து ஜெனீவாவில் நடைபெற்ற ஆயுதக் குறைப்பு மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிகாரி தாமஸ் டிநானோ, சீனா தனது அணு ஆயுதக் கட்டுமானங்களை மறைமுகமாகப் பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் உச்சத்தில் இருந்த சமயத்திலேயே சீனா இத்தகைய சோதனையை நடத்தியிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ள சீனா, தாங்கள் எப்போதும் சர்வதேச அணுசக்தி விதிகளுக்கு உட்பட்டே செயல்படுவதாகவும், அமெரிக்கா தேவையற்ற அச்சத்தை உருவாக்கி ஆயுதப் போட்டியைத் தூண்டுவதாகவும் பதில் அளித்துள்ளது.