தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் மற்றும் சீமான் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யுடன் கூட்டணி குறித்துப் பேசியபோது, “காங்கிரஸ் கட்சியை நம்மோடு சேர்த்துக்கொள்ளலாமா?” என்று விஜய் தன்னிடம் கேட்டதாகத் தெரிவித்தார்.

அதற்குப் பதிலளித்த சீமான், காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு நாம் எத்தகைய அரசியலை முன்வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, விஜய்யிடம் காங்கிரஸ் கூட்டணியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய சீமான், தமிழகத்தைப் பாதிக்கும் கச்சத்தீவு தாரைவார்த்து கொடுக்கப்பட்டது முதல், ஜிஎஸ்டி மற்றும் நீட் தேர்வு போன்ற விவகாரங்கள் வரை அனைத்தையும் கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சிதான் என்று விஜய்யிடம் விளக்கிக் கூறியதாகத் தெரிவித்தார்.

இத்தகைய மக்கள் விரோதத் திட்டங்களை அறிமுகப்படுத்திய கட்சியுடன் கைகோர்ப்பது சரியாக இருக்காது என்று தான் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சீமானின் இந்த வெளிப்படையான பேச்சு, தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் நாம் தமிழர் கட்சியின் எதிர்காலக் கூட்டணி குறித்த புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது.