நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தைத் தொடங்கிய பிறகு பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டார். ஆனால், கரூரில் அவரது பிரசாரத்தைப் பார்க்க வந்த கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதத்தில் 41 பேர் உயிரிழந்த சோகமான சம்பவத்திற்குப் பிறகு, விஜய் தனது பேரணிகளையும் பொதுக்கூட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
மேலும், காவல் துறையின் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் 30 நாட்களுக்கு முன்பே அனுமதி பெற வேண்டும் போன்ற விதிகளால் விஜய் எப்போது மீண்டும் களத்திற்கு வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சமூக வலைதளங்களில் பலரும் “வீட்டை விட்டு வெளியே வாங்க விஜய்” என்று அவரை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், விருதுநகரில் இன்று நடைபெற்ற திமுக மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்த ஒரு செயல் இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
விஜய் தனது மாநாட்டில் தொண்டர்களுக்கு மத்தியில் போடப்பட்டிருந்த ‘ரெட் கார்பெட்’ ரேம்ப் மேடையில் நடந்து வந்தது போலவே, இன்று ஸ்டாலினும் அதே பாணியில் நடந்து வந்து தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், ‘சச்சின்’ படத்தில் வரும் புகழ்பெற்ற வசனமான “அவரு வாங்குன அதே மூச்சு.. அதானே டா..” என்பதைக் குறிப்பிட்டு, விஜய்யின் பாணியை ஸ்டாலின் அப்படியே பின்பற்றுகிறார் என்று கலாய்த்து வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
