திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றாகத் திகழும் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் தாகத்தைத் தீர்ப்பதற்காக கோவில் வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த குடிநீர் இயந்திரத்தின் உள்ளே மர்மமான முறையில் அட்டைப்பூச்சிகள் மற்றும் பல்லி கிடந்ததைக் கண்டு அங்கிருந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் தூய்மையான குடிநீர் வழங்கப்பட வேண்டிய இயந்திரத்தில் இத்தகைய அசுத்தங்கள் காணப்பட்டது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகச் சீர்கேடு குறித்து பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் ஆரோக்கியத்தில் விளையாடுவதாகவும், அடிப்படை வசதிகளை முறையாகப் பராமரிக்கத் தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. புண்ணியத் தலங்களில் சுகாதாரத்தைப் பேணுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.