உத்தரப் பிரதேச மாநிலத்தில், தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த தலித் பெண் ஒருவர், அங்குப் பணிபுரிந்த திருமணமான மருத்துவரால் ஏமாற்றப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தப் பெண் கர்ப்பமடைந்த நிலையில், வலுக்கட்டாயமாகக் கட்டாயக் கருக்கலைப்பு செய்ய வைக்கப்பட்டதாகவும், கடந்த ஜூன் 2-ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ ஓம் குமார், இது ஒரு தனிநபரால் நடத்தப்பட்ட குற்றம் அல்ல என்றும், இது ஒரு திட்டமிட்ட கூட்டுப் பாலியல் வன்புணர்வு என்றும் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், அந்தப் பெண்ணைத் தனது மதத்திற்கு மாறுமாறு அழுத்தம் கொடுத்து, தடை செய்யப்பட்ட இறைச்சியை வலுக்கட்டாயமாக உண்ண வைத்துள்ளனர் என்றும், இவ்வளவு பெரிய விபரீதம் நடந்தும் குற்றவாளி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும் அவர் தனது அதிருப்தியைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்