கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தென்னரசு (24). இவர்  தலைவாசல் பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் பிளஸ்–2 படிக்கும் 17 வயது மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த பழக்கத்தின் பின்னணியில், அந்த மாணவியை தென்னரசு பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, மாணவிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவரது பெற்றோர், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அந்த மாணவி 7 மாத கர்ப்பிணி என தெரியவந்தது. இதையடுத்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, தென்னரசு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.