சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறும் பணியைத் தேமுதிக அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி வழிபாடு செய்த பிறகு, இந்தப் பணியைத் தொடங்கி வைத்தார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனு கட்டணமாகப் பொதுத் தொகுதிக்கு ரூ.15,000 மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வமுடன் வந்து விருப்ப மனுக்களை வாங்கிச் செல்வதால் தேமுதிக தலைமை அலுவலகம் தற்போது களைகட்டியுள்ளது.
விருப்ப மனு விநியோகத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, கூட்டணி குறித்துப் பல முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தேமுதிக தொண்டர்களும் மக்களும் விரும்பும் வகையிலான ஒரு வலுவான கூட்டணியையே தாங்கள் அமைப்போம் என்றும், யூகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளுக்குத் தான் பதில் சொல்லப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், இன்னும் 10 நாட்களில், அதாவது வரும் பிப்ரவரி 17-ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று அவர் ஒரு முக்கியமான ‘டெட்லைன்’ கொடுத்துள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமுதிகவின் இந்தத் தனித்துவமான வேகம் மற்ற கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
