தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாஜக அரசையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாகச் சாடியுள்ளார். மத்திய பட்ஜெட் குறித்துப் பேசிய அவர், தமிழகத்திற்குத் தேவையான நிதி மற்றும் கல்வித் திட்டங்களில் “ஒன்றிய பாசிச பாஜக அரசு” தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகக் குற்றம்சாட்டினார். இத்தகைய வஞ்சகமான பட்ஜெட்டை எதிர்க்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் “முரட்டு அடிமை” போலச் செயல்பட்டு அந்த பட்ஜெட்டை வரவேற்பது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். தமிழக உரிமைகளைத் தாரை வார்த்துவிட்டு பாஜகவுக்கு அதிமுக ஜால்ரா தட்டுவதாகவும் அவர் சாடினார்.
மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகக் குறிப்பிட்ட உதயநிதி, இதைக் கண்டிக்கத் துணிவில்லாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்குத் தேவையா எனக் கேள்வி எழுப்பினார். கல்வி மற்றும் நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பட்டியலிட்ட அவர், எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் நலனை விட பாஜகவின் விருப்பத்திற்கே முன்னுரிமை அளிப்பதாகக் கூறினார். உதயநிதியின் இந்த “முரட்டு அடிமை” என்கிற விமர்சனம் அதிமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப் பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தரப்பு என்ன சொல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் எகிறியுள்ளது.
