தேசியத் தலைநகர் டெல்லியில் நடப்பு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 800க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 15 வரையிலான காலத்தில் மொத்தம் 807 பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மாயமானவர்களில் 191 பேர் சிறார்கள் என்றும், சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போவதாகவும் அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
View this post on Instagram
இதுவரை 235 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 572 பேரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், வெள்ளை நிறக் கார் ஒன்றில் இருந்து இறங்கும் நபர் பள்ளிச் சிறுவர்களைக் கடத்த முயற்சிப்பதும், அச்சிறுவர்கள் தப்பி ஓடுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவானது டெல்லியில் அதிகரித்து வரும் மாயமானவர்களின் எண்ணிக்கையுடன் தொடர்புபடுத்திப் பேசப்பட்டாலும், அதன் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் இத்தகைய வீடியோக்கள் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். டெல்லியில் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 2.3 லட்சம் பேர் காணாமல் போயுள்ளதாகவும், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பெரும் சவாலாக இருப்பதாகவும் அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சம்பவங்கள் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
