புதுச்சேரி மாநில அரசியல் களத்தில் இந்தியா கூட்டணியின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே பகிரங்கமான மோதல் வெடித்துள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்துவிட்டு, மற்ற கூட்டணிக் கட்சிகள் மட்டும் பங்கேற்ற கூட்டத்தில் திமுகவே தலைமை தாங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் மாணிக்கம் தாகூர், “கூட்டணியில் வெறும் 8 சதவீத வாக்குகளை வைத்துள்ள திமுக தலைமை தாங்குமா? அல்லது 26 சதவீத வாக்குகளைப் பெற்றுப் பலமாக இருக்கும் காங்கிரஸ் தலைமை தாங்குமா?” எனப் புள்ளிவிவரங்களைக் காட்டிப் பொங்கியுள்ளார்.

​தமிழகத்தில் அண்ணன்-தம்பியாக இருக்கும் திமுகவும் காங்கிரஸும், புதுச்சேரியில் மட்டும் இப்படி ‘கம்பு’ சுற்றுவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் நீண்டகாலமாகப் பெரிய அண்ணன் பாத்திரத்தில் இருந்து வருவதால், திமுகவின் இந்தத் தலைமை ஆசையை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்பது மாணிக்கம் தாகூரின் பேச்சில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஒருபுறம் திமுக தனது செல்வாக்கை உயர்த்தத் துடிக்க, மறுபுறம் காங்கிரஸ் தனது கோட்டையை விட்டுக் கொடுக்க மறுப்பதால், வரும் தேர்தலுக்கு முன்பே கூட்டணியில் விரிசல் விழத் தொடங்கியுள்ளது.