மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், தனது முன்னாள் காதலியைப் பண வசதியின்றித் தவிக்கவிட்டதாகக் பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் குற்றம் சாட்டியுள்ள ஈமெயில் ஆதாரங்கள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2017-ம் ஆண்டு எப்ஸ்டீன் அனுப்பிய மின்னஞ்சல்களில், பில் கேட்ஸின் முன்னாள் காதலியான ரஷிய பிரிட்ஜ் வீராங்கனை மிலா அந்தோனோவா, அடிப்படை வசதிகள் கூட இன்றித் தனது தோழியின் வீட்டு சோபாவில் தங்கி வருவதாகவும், அவருக்கு ஏசி கூட வாங்கப் பணமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 2010-ம் ஆண்டு வாக்கில் பில் கேட்ஸ் மெலிண்டாவைத் திருமணம் செய்திருந்தபோதே, தன்னைவிட 30 வயது குறைந்த மிலாவுடன் ரகசிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

​”உலகப் பணக்காரர் இவ்வளவு கஞ்சத்தனமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று எப்ஸ்டீன் அந்த மின்னஞ்சலில் பில் கேட்ஸை கிண்டல் செய்துள்ளார். மிலாவின் படிப்புச் செலவை ஏற்ற எப்ஸ்டீன், அதனைத் திருப்பித் தருமாறு பில் கேட்ஸை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் குறித்துப் பேசிய பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா, “அந்த அசிங்கமான சூழலில் இருந்து நான் வெளியே வந்துவிட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்” எனக் கூறித் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தற்கொலை செய்துகொண்ட எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸுக்கு இருந்த தொடர்பு, தற்போது மீண்டும் உலக அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.