செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் இன்று பத்திரிகை துறையில் வேலைவாய்ப்புகள் பறிபோகும் அபாயம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மகன் இஷான் தரூர், கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ‘வாஷிங்டன் போஸ்ட்’ நிறுவனத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சுமார் 5 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட அவரது புகழ்பெற்ற கட்டுரைத் தொடரை முடக்கிவிட்டு, அவரை நீக்கியது அந்த நிறுவனம் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூனியம் என்றும், இது ஒரு தற்கொலைக்குச் சமமான முடிவு என்றும் சசி தரூர் மிகுந்த ஆவேசத்துடன் விமர்சித்துள்ளார்.

​நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள வாஷிங்டன் போஸ்ட், விளையாட்டு மற்றும் புத்தக விமர்சனப் பிரிவுகளையும் மூடியுள்ளது. உலக நாடுகளின் தூதர்களும் அமைச்சர்களும் விரும்பிப் படித்த ஒரு பகுதியை வருமானத்திற்காக மூடியது விசித்திரமானது என சசி தரூர் சாடியுள்ளார். இந்த நடவடிக்கையை அந்த நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியரே “கருப்பு நாள்” என்று வர்ணித்துள்ள நிலையில், இது செய்திகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை வெகுவாகப் பாதிக்கும் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறக்கின்றன.