அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், விளையாட்டாகச் செய்த ஒரு செயல் பெரும் கொடூரமாக முடிந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17 வயதான பிராடி மிங் என்ற சிறுவன், எரியும் நெருப்பில் பெட்ரோலை ஊற்றி விளையாடியதோடு மட்டுமல்லாமல், எதிர்பாராத விதமாகத் தனது நண்பன் மீதும் பெட்ரோலை ஊற்றித் தீயை வரவழைத்துள்ளான்.

இதில் அவரது நண்பரின் கை மற்றும் கால்களில் மிகக் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு, அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தோலில் ஏற்பட்டுள்ள ஆழமான பாதிப்புகள் அந்த இளைஞரின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், பிராடி மிங்கை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நண்பர்களுக்குள் ஏற்பட்ட சிறு தகராறினால் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டாரா அல்லது வெறும் கவனக்குறைவா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. அவர் மீது “கடுமையான தாக்குதல்” உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு சிறிய கவனக்குறைவு எப்படி ஒருவரின் வாழ்க்கையைச் சிதைக்கும் என்பதற்குச் சாட்சியாக அமைந்த இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.