சென்னையைச் சேர்ந்த சமூக சேவகரான முகமது அலி ஜின்னா, மயக்க நிலையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்படி ஒரு பெண் மயங்கிய நிலையில் ஒரு குழந்தையை வச்சு பிச்சை எடுப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஜின்னா அங்கு சென்று விசாரித்துள்ளார்.

குழந்தை தூங்குவதாக அந்தப் பெண் மழுப்ப, குழந்தையின் அசைவின்மையால் சந்தேகமடைந்த ஜின்னா போலீஸை கூப்பிடுவதாகக் மிரட்டியுள்ளார். உடனே அந்தப் பெண் கொடுத்த பிறப்புச் சான்றிதழில் இந்து பெயர் இருக்க, புர்கா அணிந்து வந்தால் வெள்ளிக்கிழமை என்பதால் நிறைய பிச்சை கிடைக்கும் என அந்தப் பெண் கூறியுள்ளார்.

தொடர்ந்து சந்தேகம் நீடித்ததால் போலீஸை அழைக்க முயன்ற ஜின்னா மீது, தன்னை காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் தவறான நடத்தை குற்றச்சாட்டை சுமத்தி கூட்டத்தைக் கூட்ட முயன்றுள்ளார். ஆனால், ஜின்னா சமூக சேவகர் என்பது அங்கிருந்த கூட்டத்திற்கு தெரிந்ததாலும், இந்த முழு சம்பவத்தையும் அவர் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்திருந்ததாலும் பெரிய பொய் புகாரில் இருந்து நூலிழையில் தப்பித்துள்ளார்.

​இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக சேவகர் முகமது அலி ஜின்னா தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை வைத்துள்ளார். திரைப்படத்தில் விஜய் அவர்கள் பிச்சைக்காரர்களின் கையில் இருக்கும் குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்ப்பது போன்ற காட்சி இடம்பெற்றதை சுட்டிக்காட்டியுள்ள அவர், நிஜத்திலும் அதேபோல அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

பிச்சைக்காரர்களின் கையில் இருக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக டிஎன்ஏ (DNA) பரிசோதனை மேற்கொண்டு, அவர்கள் உண்மையான பெற்றோரிடம்தான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அந்த குழந்தைகளை மீட்டு பள்ளிகளில் சேர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சருக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.