நடந்து முடிந்த தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்குக் கட்சியின் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள்தான் முக்கிய காரணம் என கள ஆய்வு அறிக்கையில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. மாவட்ட நிர்வாகிகளின் அலட்சியமும், தன்னிச்சையான போக்குமே இந்தத் பின்னடைவுக்கு வழிவகுத்தது என திமுகவினர் மத்தியில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, தங்களது சொந்த வாரிசுகளின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமே மனதில் கொண்டு, கட்சிக்காக உழைத்த தகுதியான இளைஞர்களை மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக இந்த கள ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சியில் துடிப்புடன் செயல்படக்கூடிய இளைஞர்களை திட்டமிட்டே ஓரங்கட்டியதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தேர்தல் சீட்டுகளையும் மாவட்ட செயலாளர்கள் முடக்கியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கட்சியின் வெற்றிக்காக இரவு பகலாக உழைக்கத் தயாராக இருந்த இளைஞர்களின் உழைப்பை மாவட்ட செயலாளர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும், இதனால் அடிமட்டத் தொண்டர்கள் கடும் அதிருப்தியில் இருந்ததே தோல்விக்குக் காரணம் என்றும் புகார்கள் வெடித்துள்ளன. இந்த விவகாரம் இப்போது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.