கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவெடுத்துள்ளார். சட்டமன்றத்தில் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஜயபாஸ்கர், திமுகவில் இணையலாமா என்றும் ஆலோசித்தார்.
ஆனால், இறுதியாகத் தனது ஆதரவாளர்களின் கருத்துக்களைக் கேட்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணையவே அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இது தொடர்பாக த.வெ.க. முக்கிய நிர்வாகிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில், வருகிற புதன்கிழமை (ஜூன் 17) சென்னையில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாகப் பெரிய அளவில் கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளார்.
டெல்டா மண்டலத்தில் பெரும் மக்கள் செல்வாக்கும், தேர்தல் வியூகங்களை வகுப்பதில் அசாத்திய திறமையும் கொண்ட விஜயபாஸ்கரின் இந்த முடிவு த.வெ.க.விற்குப் பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. இவருடன் சேர்ந்து புதுக்கோட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் பெருமளவில் த.வெ.க.வில் இணைய உள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
ஏற்கனவே நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்துள்ள நிலையில், இப்போது விஜயபாஸ்கரும் இணைய உள்ளதால் அவர் தனது விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகத் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர வாய்ப்புள்ளதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
