தேமுதிக தலைமை இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பணிகள் அதிரடியாகத் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விருப்ப மனுக்களை நாளை (பிப். 6) முதல் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மீண்டும் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​இந்த விருப்ப மனுக்களுக்கான கட்டணமாக, பொதுத் தொகுதிகளுக்கு ரூ. 15,000-மும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 10,000-மும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கப் போகும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், கட்சியின் பலத்தை நிரூபிக்க இப்போதே தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தாலும், தேர்தல் களத்தில் இறங்க தேமுதிக காட்டும் இந்த வேகம் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.