திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இ.பெரியசாமி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் மாயை என்று விமர்சித்தார்.
மகளிர் உரிமைத் தொகை உயர்வு, கல்விக்கடன் ரத்து மற்றும் இலவச சிலிண்டர் போன்ற அறிவிப்புகளை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்று குறிப்பிட்ட அவர், கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் செய்யாததை இப்போது செய்வோம் என்று கூறுவது நகைப்புக்குரியது என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தான் சொன்ன வாக்குறுதிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதாகவும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் எடப்பாடி பழனிசாமி எதை வேண்டுமானாலும் பேசிச் செல்லலாம் என்றும் அவர் சாடினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தனது சுயநலத்திற்காக எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாரதிய ஜனதா கட்சியிடம் அடகு வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஏற்கனவே மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட அதிமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் தோல்வியில் முடியும் என்று தெரிவித்த அவர், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களை முந்தைய ஆட்சியில் குறைத்ததைச் சுட்டிக்காட்டினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றும், ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தைக் காப்பாற்றுவதே அவரது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார். தேர்தலில் அதிமுகவிற்கு எதிர்க்கட்சித் தகுதிகூட கிடைக்காது என்றும், அவர்களின் புதிய வாக்குறுதிகளும் இறுதியில் புஸ்வானமாகவே போய்விடும் என்றும் அமைச்சர் இ.பெரியசாமி திட்டவட்டமாகக் கூறினார்.
