ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் கிரெக் சேப்பல், 15 வயதான இந்திய இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அசாத்திய திறமையைப் பாராட்டியுள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் 776 ரன்கள் குவித்து அசத்திய வைபவ், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்பிஎன் கிரிக்இன்போ தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் வைபவின் பேட்டிங் முறையை சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ், பிரையன் லாரா, ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் கிரேம் பொல்லாக் போன்ற உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான்களுடன் சேப்பல் ஒப்பிட்டுள்ளார்.
உடலளவிலேயே முழு வளர்ச்சியடையாத ஒரு சிறுவன், உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை மிக எளிதாக எதிர்கொள்வது டி20 பேட்டிங்கின் அபாரமான பரிணாம வளர்ச்சியாக இருந்தாலும், இது பந்துவீச்சாளர்களுக்கான ஒரு கடுமையான எச்சரிக்கை மணி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவீன பேட்டிங் தொழில்நுட்பம், மிகச் சிறிய எல்லைக் கோடுகள் (Boundaries) மற்றும் பேட்டிங்கிற்கு மட்டுமே சாதகமாகத் தயாரிக்கப்படும் ஆடுகளங்கள் ஆகியவை கிரிக்கெட் விளையாட்டை பேட்டர்களுக்கு ஆதரவாக மாற்றி, பந்துவீச்சாளர்களை அழிவின் விளிம்பிற்குத் தள்ளியுள்ளதாகச் சேப்பல் கவலை தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழல் பந்துக்கும் பேட்டுக்கும் இடையேயான சமமான போட்டியை நிரந்தரமாக அழித்துவிடுமோ என்ற அச்சம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஒருதலைப்பட்சமான போக்கு, டி20 கிரிக்கெட்டை வெறும் பவுண்டரிகளாக மட்டுமே அடிக்கும் ஒரு இயந்திரத்தனமான விளையாட்டாக மாற்றி, காலப்போக்கில் ரசிகர்களையே சலிப்படையச் செய்துவிடும் என்று கிரெக் சேப்பல் தனது கட்டுரையில் எச்சரித்துள்ளார்.
