உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில், 73 வயதான கிஷன் பியாரி என்ற முதியவர் தனது கணவரின் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காகக் கொளுத்தும் வெயிலில் கைவண்டியில் வங்கிக்கு இழுத்துச் செல்லப்பட்ட நெஞ்சை உருக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இடுப்பு எலும்பு முறிவால் அவதிப்பட்டு வரும் அந்தப் பாட்டியால் நடக்க முடியாததால், அவரது பேரன் மனு பால் முன்கூட்டியே வங்கி ஊழியர்களிடம் நிலைமையை விளக்கி மாற்று ஏற்பாடு செய்யக் கோரியுள்ளார்.
ஆனால், வங்கி ஊழியர்கள் தன்னிடம் சரியாகப் பேசாமல் அலட்சியமாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டிய அந்த இளைஞர், வேறு வழியின்றி வெள்ளிக்கிழமை அன்று தனது பாட்டியை ஒரு கைவண்டியில் அமர வைத்து, வெயிலில் இருந்து பாதுகாக்கக் குடை பிடித்தபடி வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவம் முதியோர்களிடம் வங்கி நிர்வாகம் காட்டும் அக்கறையின்மை குறித்தும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வைத்துள்ள விதிகள் குறித்தும் மக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள வங்கி மேலாளர் பிரவேஷ் குமார் வர்மா, அந்தக் குடும்பத்தினர் முதலில் வந்தபோது அப்பெண்ணை அழைத்து வர முடிந்தால் அழைத்து வருமாறும், அதற்கான பணம் செலுத்தும் ஏற்பாடுகள் வங்கியின் வெளியே செய்து தரப்படும் என்றும் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பெண்ணின் கால் உடைந்திருப்பதை அறிந்ததும், வீட்டிற்கே வந்து பணத்தை வழங்குவதற்கான நடைமுறைகளைச் செய்ய வங்கி ஊழியர் ஒருவரை அனுப்பும் வரை ஓரிரு நாட்கள் காத்திருக்குமாறு அவர்களிடம் அறிவுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கியின் தரப்பில் இது போன்ற சிறப்புச் சூழ்நிலைகளுக்கு உரிய ஏற்பாடுகள் வழக்கமாகச் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும் வங்கி மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
