தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியைத் தன் பக்கம் இழுக்க தமிழக வெற்றிக் கழகம்  தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலையில் திமுக கூட்டணியே பலமாக இருப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும், திரைமறைவில் தவெக-வுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி தங்களது கூட்டணிக்கு வரும் பட்சத்தில், அக்கட்சிக்கு 70 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு துணை முதல்வர் பதவி மற்றும் 6 அமைச்சரவை இடங்கள் என அதிரடியான சலுகைகளை விஜய் தரப்பு வழங்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் 28 தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதாகவும் தவெக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

தேசியக் கட்சியின் ஆதரவைப் பெறுவதன் மூலம் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கருதப்படும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.