உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் போர்ட்டர் எனும் சரக்கு போக்குவரத்து செயலி மூலம் ஒரு பெண் செய்த வினோதமான காரியம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படும் இந்தச் செயலியை, ஒரு பெண் தனது வீட்டுக்குப்பைகளைத் தூக்கி எறிவதற்காகப் பயன்படுத்தியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Karan Nishad (@karannishadd1)

அந்தப் பெண் அனுப்பிய பார்சலைப் பெற்றுக்கொண்ட விநியோக ஊழியர், அதனை எங்கு ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டபோது, யாரிடமும் கொடுக்கத் தேவையில்லை என்றும் அதனை அப்படியே வழியில் வீசிவிடுமாறும் அப்பெண் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர், அந்தப் பார்சலைப் பிரித்துப் பார்த்தபோது அதில் குப்பைகள் மட்டுமே இருந்ததைக் கண்டு திகைத்துப் போனார்.

நவாப்களின் நகரம் என்று புகழப்படும் லக்னோவில் வசதியான நிலையில் இருக்கும் சிலர், எளிய ஊழியர்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இதுவே சான்று என்று அந்த விநியோக ஊழியர் வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் குப்பைகளைத் தூக்கி எறியும் ஒரு நபராகச் சித்தரிக்கப்பட்டதை எண்ணி வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, வசதி படைத்தவர்கள் தொழில்நுட்பத்தையும் மனித உழைப்பையும் இவ்வளவு மனிதாபிமானமற்ற முறையில் பயன்படுத்துவதா என்று இணையவாசிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.