குஜராத் மாநிலம் காந்திநகரில் வீட்டுப்பாடம் செய்யாத ஒன்பதாம் வகுப்பு மாணவியின் காதில் அறைந்து, அவரது செவித்திறனைப் பாதித்த தனியார் பள்ளி ஆசிரியைக்கு மூன்று ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காந்திநகரில் உள்ள பா ஸ்ரீ வசந்த்குவர்பா பள்ளியில் இந்தப் பயங்கரச் சம்பவம் நிகழ்ந்தது. ஆசிரியை பருல்பென் படேல் பலமாக அறைந்ததில், 14 வயது மாணவியின் இடது காது ஜவ்வு கிழிந்து அவருக்குத் தீராத செவித்திறன் குறைபாடு ஏற்பட்டது.

இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கினை விசாரித்த கூடுதல் தலைமை நீதிபதி ஹிமான்ஷு சௌதரி, ஆசிரியையின் செயல் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஒரு குற்றமாகும் என்றும், இது ஒரு சிறுமிக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியை தரப்பில் தனக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறி தண்டனையைக் குறைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது; ஆனால் அதற்குரிய போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாததால் நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.

இறுதியாக, மாணவியைத் தாக்கிய ஆசிரியைக்கு சிறை தண்டனையுடன் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகை பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.