தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கேதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். இவருக்கும் மமதா (28) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை உட்பட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நாகேஷுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான சுஜாதா என்ற பெண்ணுக்கும் இடையே நீண்ட நாட்களாக பழக்கம் இருந்துள்ளது. திருமணத்திற்கு முன்பே தொடங்கிய இவர்களது தொடர்பு, இருவருக்கும் திருமணம் முடிந்த பின்னரும் கள்ளக்காதலாக நீடித்துள்ளது.

விஷயம் மமதாவுக்குத் தெரியவரவே, தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தப்பட்டது. அதன்பின்னர் சுஜாதாவுடனான தொடர்பை நாகேஷ் துண்டித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, நாகேஷை மீண்டும் தன்வசப்படுத்த மமதாவை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார்.

இதற்காக  சம்பவத்தன்று, கத்தி மற்றும் மிளகாய்த்தூளுடன் பெட்ரோல் கேனை எடுத்துக்கொண்டு சுஜாதா நாகேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் அமர்ந்து மமதா தனது 6 மாத குழந்தைக்கு பால் புகட்டிக்கொண்டிருந்தார். சற்றும் எதிர்பாராத நேரத்தில், மமதாவின் மீது பெட்ரோலை ஊற்றி சுஜாதா தீ வைத்தார்.

உடல் பற்றி எரிந்த நிலையிலும், தனது குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் மமதா குழந்தையை தூக்கி வீசியுள்ளார். எனினும், தீயின் தாக்கம் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை. மமதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், உடல் கருகிய நிலையில் மமதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

 இந்தக் கொலைக்கு நாகேஷின் தூண்டுதலும் காரணம் என மமதாவின் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுஜாதாவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காக தாயையும் சேயையும் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.