கர்நாடக மாநிலம் கோலார் அருகே, வாய் பேச முடியாத தனது மாற்றுத்திறனாளி சகோதரிக்கு வாழ்வளிக்க வேண்டி, அவரையும் சேர்த்து மணமகனைத் திருமணம் செய்ய வைத்த தங்கையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவைச் சேர்ந்தவர் லலிதா. இவருக்கும் உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. லலிதாவிற்கு சுப்ரியா என்ற அக்கா உள்ளார். அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், அவரைத் திருமணம் செய்ய யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
தனது திருமணத்திற்குப் பிறகு அக்கா தனிமையில் வாடுவார் என எண்ணிய லலிதா, மணமகன் உமாபதியிடம் ஒரு உருக்கமான கோரிக்கையை வைத்தார். “எனது அக்காவை யாரும் திருமணம் செய்ய முன்வராததால், என்னுடன் சேர்த்து அவரையும் நீங்களே திருமணம் செய்து கொள்ள வேண்டும்” என நிபந்தனை விதித்தார்.
ஆரம்பத்தில் இதற்குத் தயக்கம் காட்டிய உமாபதியிடம், “அக்காவைத் திருமணம் செய்துகொண்டால் மட்டுமே நான் உங்களை மணப்பேன்” என லலிதா உறுதியாகக் கூறினார். லலிதாவின் பாசத்தையும், சுப்ரியாவின் நிலையையும் புரிந்துகொண்ட உமாபதி, இதற்குச் சம்மதம் தெரிவித்தார். இருவீட்டுப் பெரியவர்களும் பேசி இந்த முடிவிற்குப் பச்சைக்கொடி காட்டினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற திருமண விழாவில், ஒரே மேடையில் சுப்ரியா மற்றும் லலிதா ஆகிய இருவருக்கும் உமாபதி தாலி கட்டினார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இந்த வினோதத் திருமணம் இனிதே நடைபெற்றது.
தனது திருமண வாழ்க்கையிலேயே அக்காவுக்குப் பங்கு கொடுத்து, அவருக்கு ஒரு மறுவாழ்வை அமைத்துக் கொடுத்த தங்கை லலிதாவை ஒருபுறம் பாராட்டினாலும் மறுபுறம் வேறு ஏதாவது செய்திருக்கலாம் என்று சில தரப்பினர் கூறுகிறார்கள். மேலும் இந்த திருமணம் தற்போது அந்த பகுதியில் பேசும் பொருளாக மாறி உள்ளது2
