சத்தீஸ்கர் மாநிலத்தில், தனது செல்போன் எண்ணை பிளாக் செய்ததால் ஆத்திரமடைந்த 22 வயது இளம்பெண், காதலனை அவர் வீட்டிலேயே வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணும், இளைஞரும் நீண்ட காலமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வந்துள்ளன. இதன் உச்சகட்டமாக, அந்த இளைஞர் காதலியின் செல்போன் எண்ணை ‘பிளாக்’ (Block) செய்துள்ளார்.
தனது அழைப்புகளை காதலன் தவிர்க்கத் தொடங்கியதால் அந்தப் பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும், தனது காதலன் தன்னைத் தவிர்த்துவிட்டு வேறொரு பெண்ணுடன் பழகி வருவதாக அவர் சந்தேகிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், காதலனின் வீட்டிற்கு நேராகச் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காதலனின் மார்பில் பலமாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளம்பெண்ணைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் விவகாரத்தில் காதலனை காதலியால் கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
