உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள், அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசியாபாத் பகுதியில் உள்ள ஒரு பிளாட்டில் வசித்து வரும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நிஷிகா (16), பிராச்சி (14) மற்றும் பாக்கி (12) ஆகிய மூன்று சகோதரிகள், நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டின் பால்கனியிலிருந்து ஒன்றாகக் கீழே குதித்துள்ளனர். பலத்த காயமடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய சோதனையில் ஒரு பக்க அளவிலான தற்கொலை கடிதம் சிக்கியது. அதில், “அப்பா எங்களை மன்னித்து விடுங்கள். இந்த டைரியில் எழுதியிருப்பவை அனைத்தும் உண்மை, தயவுசெய்து அதைப் படியுங்கள்” என்று எழுதி, அழுவது போன்ற ஒரு எமோஜியையும் வரைந்துள்ளனர். சிறுமிகள் குறிப்பிட்ட அந்த டைரியைக் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், மூன்று சிறுமிகளும் ‘கொரியன் லவர் கேம்’ (Korean Lover Game) போன்ற ஆன்லைன் டாஸ்க் வகை விளையாட்டுகளுக்குத் தீவிரமாக அடிமையாகி இருந்தது தெரியவந்துள்ளது. குளிப்பது, உண்பது, பள்ளிக்குச் செல்வது என அனைத்து அன்றாடச் செயல்களையும் ஒன்றாகவே செய்து வந்த இந்தச் சிறுமிகள், தற்கொலை முடிவையும் அவ்வாறே ஒன்றாகச் செயல்படுத்தியுள்ளனர்.
ஆன்லைன் விளையாட்டில் வழங்கப்பட்ட ஏதேனும் சவால் காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்தார்களா? என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சிறுமிகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஒரே வீட்டில் மூன்று பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த குடியிருப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
