நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது சிறு கவனக்குறைவு கூட எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்குச் சான்றாக, சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் ஒரு விபத்து வீடியோ காண்போரை அதிர வைத்துள்ளது. அதாவது பரபரப்பான தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தன. அப்போது கார் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அதன் ஓட்டுநர் சாலையோரம் காரை நிறுத்தியுள்ளார். நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துவது ஆபத்தானது என்ற சூழலில், போதிய பாதுகாப்பு எச்சரிக்கைகளை அவர் பின்பற்றவில்லை எனக் கூறப்படுகிறது.

காரின் ‘போனட்’ (Hood) திறந்திருந்த நிலையில், அதிலிருந்த நபர் கீழே இறங்கி அதனை மூட முயன்றுள்ளார். சாலையின் போக்குவரத்து நெரிசலையோ, பின்னால் வரும் வாகனங்களையோ கவனிக்காமல் அவர் போனட்டை மூடுவதிலேயே குறியாக இருந்தார்.

அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த கார் மீது பலமாக மோதியது. இந்த மோதலின் தாக்கம் எவ்வளவு பயங்கரமாக இருந்தது என்றால், காரின் முன்னால் நின்று கொண்டிருந்த நபர் தூக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்தார். மேலும் இந்தக் கொடூர விபத்து தொடர்பான வீடியோ ‘X’ தளத்தில் வைரலாகி வருகிறது.