உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பாரத் சிட்டி குடியிருப்பில், 12, 14 மற்றும் 16 வயதுடைய மூன்று உடன்பிறந்த சகோதரிகள் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளியை காட்டியுள்ளது.
கடந்த புதன்கிழமை நள்ளிரவு சுமார் 2 மணியளவில் பாக்கி (12), பிராச்சி (14) மற்றும் நிஷிகா (16) ஆகிய மூன்று சகோதரிகள், தங்கள் வீட்டில் இருந்த பூஜையறை ஜன்னல் வழியாக ஒரு நாற்காலியின் உதவியுடன் ஏறி, ஒருவருக்குப் பின் ஒருவராக கீழே குதித்துள்ளனர். பலத்த காயமடைந்த அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி, அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது, இந்தச் சிறுமிகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகியுள்ளனர். குறிப்பாக, ‘கொரியன் லவர் கேம்’ (Korean Lover Game) என்ற டாஸ்க் அடிப்படையிலான விளையாட்டில் அவர்கள் தீவிரமாக மூழ்கியிருந்தது தெரியவந்துள்ளது.
இந்த விளையாட்டின் போதை காரணமாக சிறுமிகள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் கவலையடைந்த பெற்றோர்கள், அவர்களை விளையாட விடாமல் தடுத்து, கண்டித்துள்ளனர். இதுவே வீட்டில் பெரும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு மேலான விளையாட்டா அல்லது வாழ்க்கையா என்ற போராட்டத்தில், டிஜிட்டல் உலகம் அவர்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
இந்தச் சகோதரிகள் மூவரும் குளிப்பது, உண்பது, உறங்குவது என அனைத்துச் செயல்களையும் ஒன்றாகவே செய்து வந்துள்ளனர். ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருப்பதை அவர்களால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. இதுவே கடைசியில் மரணத்தையும் ஒன்றாகத் தழுவ வைத்துள்ளது.
இது குறித்து ஷாலிமார் கார்டன் ஏ.சி.பி அதுல் குமார் சிங் கூறுகையில், “சிறுமிகள் ஒரு குறிப்பிட்ட கேமிங் செயலிக்கு அடிமையாக இருந்ததாகத் தெரிகிறது. சம்பவ இடத்திலிருந்து சில கையெழுத்துப் பிரதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும் பிள்ளைகள் ஆன்லைன் விளையாட்டுகளில் அதீத ஆர்வம் காட்டுவதும், தனிமையில் இருப்பதும் ஒரு எச்சரிக்கை மணியாகும். டிஜிட்டல் போதையிலிருந்து குழந்தைகளை மீட்க, அவர்களுடன் மனம் விட்டுப் பேசுவதும், தேவைப்பட்டால் உளவியல் ஆலோசனைகளை வழங்குவதும் அவசியம் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.
