வருகிற பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்தத் திடீர் முடிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் விளையாடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) நேற்று பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களைத் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியது. ஆனால், எந்தவொரு நாடும் பாகிஸ்தானின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

நேற்று இரவு வரை இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ICC) பாகிஸ்தான் எந்தத் தகவலையும் முறைப்படி தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் வாரியங்கள் அனைத்தும், “இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எந்தப் பங்கும் இல்லை; இந்தியாவுக்கு எதிராக விளையாடாமல் இருக்கத் தர்க்கரீதியான காரணங்கள் ஏதுமில்லை” எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டன. ஏற்கனவே 19 வயதுக்குட்பட்டோர் போட்டிகளிலும், மகளிர் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுடன் விளையாடி வரும் பாகிஸ்தான், தற்போது பாதுகாப்பு காரணங்களைக் கூறிப் பின்வாங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஐசிசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, இந்தியாவுக்குப் பயணம் செய்ய மறுத்த வங்கதேச அணி, டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. “பாதுகாப்பு காரணங்களுக்காக” போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. அட்டவணையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது எனத் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்தே வங்கதேசம் நீக்கப்பட்டது. தற்போது பாகிஸ்தானும் அதே போன்ற ஒரு இக்கட்டான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற வேண்டிய இந்தியா – பாகிஸ்தான் ஆட்டம் நடக்குமா அல்லது பாகிஸ்தானுக்குப் புள்ளிகள் குறைக்கப்படுமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.