கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவியின் நிலைகண்டு மனமுடைந்த மின்வாரிய பொறியாளர், தனது மனைவி மற்றும் மகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கதிர்நாயக்கன்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராக (Junior Engineer) பணியாற்றி வந்தவர் கமலேஷ். இவர் தனது மனைவி இலக்கியா மற்றும் 10 வயது மகள் எக்சிதா ஏஞ்சல் ஆகியோருடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியாவிற்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்காகப் பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், நோயின் தாக்கம் குறையவில்லை என்று கூறப்படுகிறது. நாளுக்கு நாள் இலக்கியாவின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களாலும், அவர் அனுபவித்த வலியைக் கண்டும் கமலேஷ் கடும் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
பல இடங்களில் சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால், விரக்தியடைந்த கமலேஷ் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். அதன்படி, நேற்று இரவு உணவில் விஷம் கலந்து மூவரும் உட்கொண்டுள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன்பாக, கமலேஷ் தனது அலுவலக நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் இத்தகவலைச் செய்தியாக அனுப்பியுள்ளார்.
இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் சடலமாகக் கிடந்தனர்.
இதையடுத்து, மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
