உணவு மீதான ஆர்வம் சில நேரங்களில் விபரீதமான செயல்களுக்குத் தூண்டுகோலாகிவிடுகிறது என்பதையே உத்தரபிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் காட்டுகிறது. அங்குள்ள ஒரு சிறுவன், தெருவோரக் கடையில் விற்கப்படும் மோமோஸ் உணவை வாங்குவதற்காகத் தனது வீட்டிலிருந்த சுமார் 86 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடி கடைக்காரரிடம் கொடுத்துள்ளான்.

மேலும் நகைகளின் மதிப்பைப் பற்றிச் சிறுவனுக்குப் புரிதல் இல்லாததும், அந்தச் சிறுவனின் ஆசையைச் சாதகமாக்கிக் கொண்டு கடைக்காரர் அந்த நகைகளைப் பெற்றுக் கொண்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.

அந்தச் சிறுவன் மோமோஸ் சாப்பிடுவதற்காகப் பலமுறை அந்த நகைகளைக் கொண்டு சென்றிருப்பது தெரியவந்தது. தற்போது அந்தப் பேராசை பிடித்த கடைக்காரரைக் காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு தட்டு மோமோஸுக்காக லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சிறுவன் தாரைவார்த்த இந்தச் சம்பவம், தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.