தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்து வரும் அரசியல் நகர்வுகள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தவெக-வில் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் இல்லை என்ற விமர்சனம் இருந்து வந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அக்கட்சியில் இணைந்தது பெரும் பலமாகக் கருதப்பட்டது.
அவரைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் ஆகியோரும் அடுத்தடுத்து விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் தனக்கு இடமில்லை என்பதை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து உறுதிப்படுத்தி வருவதால், ஓ. பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது தவெக-வில் இணைந்துள்ள ஜே.சி.டி. பிரபாகர் அளித்த பேட்டியில், ஓபிஎஸ் அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வருவதே சரியான முடிவாக இருக்கும் என்று தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பவர் என்றும், அனுபவம் மிக்க அவருடைய தலைமையின் கீழ் பணியாற்றுவது பெருமை அளிப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை தற்போது வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியையே தனது முதல் தேர்வாக வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது முக்கிய ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக விஜய்யின் பக்கம் சாய்ந்து வருவது ஓபிஎஸ் தரப்பிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
தனது ஆதரவாளர்களின் விருப்பப்படி அவர் தவெக-வில் இணைவாரா அல்லது புதிய முடிவெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
