2026-2027ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மத்திய அரசும், நிதியமைச்சரும் கடந்த ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கையை முழுமையாகப் புறக்கணித்துவிட்டு, மக்களுக்குப் புரியாத வார்த்தைகளை மட்டுமே பட்ஜெட்டில் அடுக்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்கா விதித்துள்ள வரிகளால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம், சீனாவுடனான அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் இந்தியாவில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீடுகள் போன்ற முக்கியமான 10 பொருளாதார சவால்கள் குறித்து இந்த பட்ஜெட்டில் எந்தத் தீர்வும் இல்லை என்று அவர் சாடியுள்ளார்.

இந்த பட்ஜெட் உரையின் போது அவையில் இருந்தவர்களின் கைதட்டல்கள் வெறும் கடமைக்காக மட்டுமே இருந்ததாகவும், நிதி நிர்வாகத்தைப் பொறுத்தவரை இது மிகவும் மோசமான அறிக்கை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கல்களை நிதி அமைச்சர் தனது உரையில் கையாளத் தவறிவிட்டதால், பார்வையாளர்கள் விரைவிலேயே கவனத்தை இழந்துவிட்டனர் என்றும், நிதி நிர்வாகத்தின் தோல்வியையே இந்த பட்ஜெட் காட்டுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.