அகமதாபாத்தின் சபர்மதி பகுதியில் உள்ள மெட்டிஸ் (Metis) தனியார் மருத்துவமனையில், தற்கொலை முயற்சியால் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணிடம், அங்கு பணிபுரிந்த இந்திரஜித் ரத்தோடு என்ற ஆண் செவிலியர் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். குடும்பப் பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண், மருந்துகள் கொடுக்கப்பட்டதால் அரை மயக்க நிலையில் இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, அந்த நர்ஸ் அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அந்தப் பெண் ஓரளவு நினைவு திரும்பி சத்தம் போடவே, அங்கிருந்து அந்த நர்ஸ் தப்பியோடிவிட்டார். இது குறித்து ஜனவரி 27 அன்று அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தற்போது அந்த நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினரிடம் இந்தத் துயரத்தைச் சொல்லவே, அவரது தந்தை மருத்துவமனையில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைக் கேட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் ஆரம்பத்தில் அதைத் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் போலீஸ் தலையிட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த நர்ஸ் தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. திருமணமான அந்த நர்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மருத்துவமனை நிர்வாகத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் குறித்தும் போலீசார் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
