கோழிக்கோடு அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான வைசாகன் என்ற நபரை எலத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் அழைத்துச் சென்று ஆதாரங்களைத் திரட்டினர். மாளிகக்கடவு பகுதியில் உள்ள பட்டறையில் வைத்து நடைபெற்ற இந்த ஆய்வின்போது கொலையுண்ட பெண்ணின் டைரி கைப்பற்றப்பட்டது.
அந்த டைரியில் உள்ள தகவல்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பள்ளிப் பருவம் முதலே அந்தப் பெண்ணை வைசாகன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் அவரது டைரி குறிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது.
இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று ஆசை வார்த்தை கூறி அந்தப் பெண்ணை பட்டறைக்கு வரவழைத்த வைசாகன் அங்கு அவரைத் திட்டமிட்டு கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது. ஏற்கனவே திருமணமான வைசாகன் மற்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்த இளம்பெண் அவரிடமிருந்து விலக முயன்றுள்ளார்.
தமக்கு நேர்ந்த கொடுமைகளை அந்தப் பெண் வெளியே கூறிவிடுவார் என்ற அச்சத்தில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. டைரியில் உள்ள கையெழுத்து அந்தப் பெண்ணுடையது தானா என்பதை உறுதிப்படுத்த தடயவியல் நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்ப காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
