தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் 17-வது சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது. தற்போது நான்கு முனைப் போட்டி நிலவும் சூழலில் தே.மு.தி.க, பா.ம.க மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் தங்களது கூட்டணிக் முடிவை அறிவிக்கவில்லை.

குறிப்பாக, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க, தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுடனும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து அதிரடியான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குத் தோழமை கட்சிகள்தான் என்றும், பழகுவது வேறு அரசியல் கூட்டணி வேறு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

யாருடைய அவசரத்திற்காகவும் முடிவுகளை அறிவிக்க முடியாது என்று கூறிய அவர், தே.மு.தி.க-விற்கு உரிய மரியாதையும் நியாயமான இடங்களும் எங்கு கிடைக்கிறதோ, அங்குதான் கூட்டணி அமைப்போம் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.