சீனாவின் யுனான் மாகாணத்தில், தனது 10 மாதக் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி, தாய் ஒருவரே சுமார் 600 முறை ஊசியால் குத்தியுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. புவேர் நகரில் உள்ள மோஜியாங் கவுண்டி மருத்துவமனையில், கடுமையான காய்ச்சல் மற்றும் நடுக்கத்துடன் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதன் உடல் முழுவதும் நூற்றுக்கணக்கான ஊசித் தழும்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
குறிப்பாக, தைக்கும் ஊசியால் கழுத்துப் பகுதியில் குத்தப்பட்டதில், அதன் முனை உடைந்து முதுகெலும்பில் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையின் தாய் தாவோ என்பவர், பாரம்பரிய மருத்துவ முறை என்ற பெயரில் குழந்தைக்குச் சளி, இருமல் அல்லது காய்ச்சல் ஏற்படும் போதெல்லாம் இவ்வாறு ஊசியால் குத்தி இரத்தம் எடுத்து வந்துள்ளார்.
மேலும், குழந்தை குறும்பு செய்யும் போது தண்டனை அளிப்பதற்காகவும் இந்த முறையைப் பயன்படுத்தியுள்ளார். இதற்காகப் பயன்படுத்தப்பட்ட துருப்பிடித்த ஊசியால் குழந்தைக்குக் கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளது.
தற்போது ஷாங்காய் ஜியாடோங் பல்கலைக்கழக மருத்துவமனையின் முதுகுத்தண்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சூய் வென்யுவான் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை மூலம் ஊசி முனையை அகற்றி குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர். அறியாமை மற்றும் மன அழுத்தத்தால் இழைக்கப்பட்ட இந்தச் செயலைச் சீன அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
