அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வழங்கிய விலையுயர்ந்த பரிசுகள் குறித்த விவரங்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம், பிரதமர் மோடி அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு ரூ.6.5 லட்சம் மதிப்பிலான ‘ஸ்டெர்லிங் சில்வர்’ (Sterling Silver) ரயில் சிலையை பரிசாக வழங்கினார். இதுவே அவர் வழங்கிய பரிசுகளில் மிகவும் விலையுயர்ந்ததாகும். அதேபோல், முன்னாள் முதல் பெண்மணி ஜில் பைடனுக்கு ரூ.2.5 லட்சம் மதிப்பிலான காஷ்மீர் பஷ்மினா சால்வை வழங்கப்பட்டது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மேற்கொண்ட பயணத்தின் போது, ஜோ பைடனுக்கு நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட சந்தன மரப் பெட்டி, வெள்ளி விளக்கு மற்றும் வெள்ளி விநாயகர் சிலை ஆகியவற்றை பிரதமர் மோடி வழங்கியிருந்தார்.
அப்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கு ரூ.1.11 லட்சம் மதிப்பிலான ‘கிருஷ்ண ராசலீலா’ வெள்ளிப் பெட்டியும், அவரது கணவர் டக்ளஸ் எம்ஹாப்பிற்கு ரூ.49,000 மதிப்பிலான ‘கஃப்லிங்க்ஸ்’ (Cufflinks) அணிகலனும் வழங்கப்பட்டன.
இதேபோன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலர் லாயிட் ஆஸ்டினுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான வெண்கல நடராஜர் சிலையை வழங்கினார். அதன்பிறகு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனுக்கு காஷ்மீர் பஷ்மினா சால்வையை வழங்கியுள்ளார்.
அமெரிக்கச் சட்டப்படி, அந்நாட்டு உயர்மட்ட அதிகாரிகள் வெளிநாட்டுத் தலைவர்களிடமிருந்து பெறும் பரிசுகளின் மதிப்பு 480 டாலருக்கு அதிகமாக இருந்தால், அதன் விவரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாகும். அதனடிப்படையிலேயே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது இந்தப் பரிசுகள் அனைத்தும் அமெரிக்கத் தேசிய ஆவணக் காப்பகத்தில் (National Archives) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
