மியான்மரை மையமாகக் கொண்டு சர்வதேச அளவில் பல ஆயிரம் கோடி ரூபாய் சைபர் மோசடிகளில் ஈடுபட்டு வந்த ‘மிங்’ (Ming) குடும்பத்தைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளிகளுக்குச் சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இளைஞர்களைச் சிறைபிடித்து சித்திரவதை செய்த இந்தக் கும்பல் மீதான சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மியான்மரின் கோகாங் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நான்கு பெரிய குற்றக் கும்பல்களில் ‘மிங்’ குடும்பம் மிக முக்கியமானது. இவர்கள் ‘ஐடி வேலை’ என்று ஆசை காட்டி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களைக் கடத்திச் சென்று, ரகசிய இடங்களில் சிறைபிடித்து வைத்திருந்தனர். சிறைபிடிக்கப்பட்ட இளைஞர்களைக் கொண்டு ‘ரோமன்ஸ் ஸ்கேம்’ (Romance Scam) எனப்படும் ஆன்லைன் முதலீட்டு மோசடிகளைச் செய்ய வற்புறுத்தி வந்தனர்.
இந்தச் சர்வதேசக் கும்பல் ஆண்டுதோறும் சுமார் ரூ.3.5 லட்சம் கோடி வரை மோசடி செய்து வந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் விரித்த வலையில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள் உலகெங்கும் உள்ளனர். இவர்களிடம் சிக்கிய இளைஞர்கள் தப்பிக்க முயன்றபோது, 14 சீனக் குடிமக்களை இந்தக் கும்பல் கொடூரமாகக் கொலை செய்தது. இந்தச் சம்பவம் சீன அரசாங்கத்தைக் கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
இதனையடுத்து, கும்பல் தலைவன் மிங் ஜுய்சாங்கை கைது செய்ய சீனா பிடிவாரண்ட் பிறப்பித்தது. மியான்மர் அதிகாரிகள் அவரைச் சுற்றி வளைத்தபோது, அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இருப்பினும், அவரது மகன் மிங் குவோபிங் மற்றும் பேத்தி மிங் சென்சென் உள்ளிட்ட 11 பேரைச் சீன அதிகாரிகள் கைது செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்றனர்.
சீன உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் முடிவில், மிங் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, நேற்று அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகச் சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் “எல்லையோரங்களில் நடக்கும் சூதாட்டம், போதைப்பொருள் மாபியா மற்றும் ஆன்லைன் மோசடிகளை முற்றிலும் ஒழிக்கும் வரை எங்களது வேட்டை தொடரும்” என்று சீன வெளியுறவுத்துறை இச்சம்பவம் குறித்துத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
