குருகிராம் நகரின் விஜய் விஹார் செக்டார் 30 பகுதியில், தெரு நாய்கள் வழிப்போக்கர்களைத் தாக்கும் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன. பட்டப்பகலில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில், முதலில் சாலையில் நின்றுகொண்டிருந்த டெலிவரி ஊழியர் ஒருவரின் காலை ஒரு தெரு நாய் கவ்விப் பிடித்துத் தாக்கியுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில், அதே பகுதியில் பைகளுடன் நடந்து சென்ற பெண் ஒருவரை அந்த நாய் ஆக்ரோஷமாகப் பாய்ந்து கடிக்க முயன்றது. இதில் நிலைகுலைந்த அந்தப் பெண் அலறியபடி கையில் இருந்த பைகளைக் கீழே போட்டுவிட்டுத் தப்பிக்க முயன்றார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டி அந்தப் பெண்ணை மீட்டனர். இந்தப் பகுதிகளில் நாய்களுக்கு உணவளிப்பவர்களால் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து, பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகக் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்தில் உள்ளூர் நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.