நிர்வாகி அல்லது ஓட்டுநர் இன்றி தானாகவே நகரத் தொடங்கிய லாரி ஒன்றை, இளம் பெண் ஒருவர் துணிச்சலுடன் செயல்பட்டு தடுத்து நிறுத்திய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. சாலை ஓரப் பணி நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற லாரி ஒன்று, திடீரென மெதுவாக முன்னோக்கி நகரத் தொடங்கியது.

 

அப்போது அங்கிருந்தவர்கள் திகைத்து நின்ற வேளையில், அந்த வழியாக நடந்து சென்ற பெண் ஒருவர் சுதாரித்துக் கொண்டு ஓடும் லாரியின் கதவைப் பிடித்து லாவகமாக உள்ளே குதித்தார். லாரி கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்தவர்கள் மீது மோதவிருந்த இக்கட்டான சூழலில், அவர் உள்ளே சென்று கை பிரேக்கை இயக்கி லாரியை பத்திரமாக நிறுத்தினார்.

அதே வேளையில் பின்னால் வந்த இருவர் லாரியைத் தள்ளிக் கட்டுப்படுத்த முயன்றனர். விபரீதம் ஏதும் நிகழும் முன்பே அந்தப் பெண்ணின் சமயோசித புத்தியால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் எங்கு எப்போது நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், ஆபத்தான நேரத்தில் அஞ்சாமல் செயல்பட்ட அந்தப் பெண்ணைப் பாராட்டி இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.