கர்நாடக மாநிலம் தாவணகரே மாவட்டத்தில், மனைவி காதலனுடன் சென்ற துக்கத்தில் கணவனும், அந்தத் திருமணத்தை முன்னின்று நடத்திய பெண்ணின் தாய்மாமனும் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சரஸ்வதி என்ற பெண்ணிற்கும், ஹரிஷ் (30) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 23-ஆம் தேதி கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய சரஸ்வதி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் சரஸ்வதி தனது காதலன் சிவகுமாருடன் சென்றது உறுதி செய்யப்பட்டது. ஆசை ஆசையாய் மணந்த மனைவி, திருமணமான இரண்டே மாதத்தில் காதலனுடன் சென்றதை அறிந்த கணவர் ஹரிஷ், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் செய்தி ஹரிஷின் குடும்பத்தினரை நிலைகுலையச் செய்தது. குறிப்பாக, இந்தத் திருமணத்தை உறவினர்கள் மத்தியில் முன்னின்று நடத்தி வைத்த சரஸ்வதியின் தாய்மாமன் ருத்ரேஷ் (36), ஹரிஷின் மரணத்திற்குத் தானே காரணம் என வேதனையடைந்தார். மணமகனைத் தேர்ந்தெடுத்ததில் தனது முடிவு தவறாகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சியில், ருத்ரேஷும் தற்கொலை செய்துகொண்டார்.
காவல்துறையினர் நடத்திய மேல் விசாரணையில், சரஸ்வதிக்கு திருமணத்திற்கு முன்பே சிவகுமாருடன் தொடர்பு இருந்ததும், அதனை மறைத்து அவர் ஹரிஷைத் திருமணம் செய்ததும் தெரியவந்தது. தற்போது சரஸ்வதி மற்றும் அவரது காதலன் சிவகுமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தவறான முடிவுகளால் இரண்டு உயிர்கள் பறிபோன இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
