டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவில் கமாண்டோவாகப் பணியாற்றி வந்த பெண் காவலர், வரதட்சணைக் கொடுமையால் கணவரால் தாக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தலைநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆயுதப்படை பிரிவான ‘ஸ்வாட்’ (SWAT) பிரிவில் காஜல் (27) என்பவர் கமாண்டோவாகப் பணியாற்றி வந்தார். இவரும் அங்குர் சவுத்ரி என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், காஜல் தற்போது மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.
திருமணமான சில காலத்திலேயே, கூடுதல் வரதட்சணையாகப் பணம் மற்றும் கார் கேட்டு காஜலை அவரது கணவர் அங்குர் சித்திரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில், உடற்பயிற்சி செய்யும் ‘டம்பல்’ கட்டையால் காஜலை அங்குர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும், அவரது தலையைச் சுவரில் மோதியதில் காஜலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.
தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மூளை செயலிழந்த நிலையில், காஜல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐந்து நாட்களாகத் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்குப் போராடி வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காஜலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், டெல்லி காவல்துறையினர் வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்து அங்குர் சவுத்ரியைக் கைது செய்துள்ளனர்.
நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் ஒரு பெண் கமாண்டோவே வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்திருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
