பீகார் மாநிலம் பாட்னாவில் டெலிவரி ஊழியராகப் பணிபுரியும் தனது பழைய பள்ளித் தோழனை, பெண் ஒருவர் கிண்டல் செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. பள்ளிப் பருவத்தில் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசிய நீ, தற்போது பீட்சா விநியோகம் செய்கிறாயா எனக் கேட்டு அந்தப் பெண் எள்ளி நகையாடியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Her Clarification video: https://t.co/gIQQ1eoBf2 pic.twitter.com/QeWhr0z48j
— Ghar Ke Kalesh (@gharkekalesh) January 29, 2026
எனினும், அந்த ஊழியர் எவ்வித கோபமும் இன்றி மிகுந்த நிதானத்துடன் தனது பணியைத் தொடர்ந்த விதம் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளது. எந்த வேலையும் குறைவானது அல்ல என்றும், நேர்மையான உழைப்பு ஒருபோதும் அவமானத்திற்குரியது அல்ல என்றும் கூறி அந்தப் பெண்ணின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, இது ஒரு திட்டமிடப்பட்ட நாடகம் என்று அந்தப் பெண் விளக்கம் அளித்துள்ளார். நகைச்சுவைக்காகவும், சாமானிய மக்களின் போராட்டத்தை வெளிப்படுத்தவுமே தனது நண்பருடன் இணைந்து இந்த வீடியோவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இத்தகைய காணொளிகள் உழைக்கும் வர்க்கத்தினரை இழிவுபடுத்துவதாக இருப்பதாகக் கூறி பொதுமக்கள் இதனை ஏற்க மறுத்து வருகின்றனர்.
